
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய பெர்த் ஸ்காச்சர்ஸ் அணியில் ஸாக் கிரௌலி ஒரு ரன்னிலும், கூப்பர் கன்னொலி ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த ஆரோன் ஹார்டி - ஜோஷ் இங்லிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
பின் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 57 ரன்களில் ஆரோன் ஹார்டியும், 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 64 ரன்களில் ஜோஷ் இங்லிஸும் விக்கெட்டை இழக்க பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் 19.4 ஓவர்களில் பெர்த் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மெல்போர்ன் அணி தரப்பில் டாம் ரோஜர்ஸ், சதர்லேண்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.