BBL 2024-25: பெர்சன், பார்ட்லெட் அசத்தல்; பிரிஸ்பேன் ஹீட் அபார வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 14ஆவது சீசன் பிக் பேஷ் லீக் டி20 தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் தொடக்க வீரர் தாமஸ் ரோஜர்ஸ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த ஜோ கிளார்க் மற்றும் சாம் ஹார்பர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து 5 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 32 ரன்களில் ஜோ கிளார்க் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாம் ஹார்பரும் 46 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
Trending
பின்னர் களமிறங்கிய கேப்டன் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 26 ரன்களையும், கார்ட்ரைட் 15 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பியூ வெப்ஸ்டர் 28 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களைச் சேர்த்தது. பிரிஸ்பேன் ஹீட் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸேவியர் பார்ட்லெட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பிரிஸ்பேன் அணிக்கு ஜேக் வுட் - ஜிம்மி பெர்சன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர். இருவாரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஜேக் வுட் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய மேத்யூ ரென்ஷாவும் 18 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் ஜிம்மி பெர்சன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அவருடன் இணைந்த மேக் பிரைன்டும் அதிரடியாக விளையாட பிரிஸ்பேன் அணியின் வெற்றியும் உறுதியானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜிம்மி பெர்சன் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 72 ரன்களையும், மேக்ஸ் பிரைண்ட் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியின் பிரிஸ்பேன் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஜிம்மி பெர்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Win Big, Make Your Cricket Tales Now