
ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜீலாங்கில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஹாபர்ட் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹாபர்ட் அணிக்கு மேத்யூ வேட் - மிட்செல் ஓவன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மேத்யூ வேட் 5 ரன்னிலும், மிட்செல் ஓவன் 10 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதில் பென் மொக்டர்மோட் ரன்கள் ஏதுமின்றியும், நிகில் சௌத்ரி 2 ரன்னிலும், டிம் டேவிட் மற்றும் கிறிஸ் ஜோர்டன் ஆகியோரும் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழக்க, நிதானமாக விளையாடி வந்த ஷாய் ஹோப்பும் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து வந்த ரைலீ மெரிடித்தும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க ஹாபர்ட் அணி 40 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் நாதன் எல்லிஸ் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 35 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 12.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 74 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய டாம் ரோஜர்ஸ், வில் சதர்லேண்ட், ஃபெர்கஸ் ஓ நீல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.