
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. குறிப்பாக மிகச் சிறப்பாக விளையாடியும் இந்தியா கோப்பையை வெல்லத் தவறியதால் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் பதவி பற்றி தற்போது கேள்வி எழுந்துள்ளது. அதே போலவே தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட் பதவி காலமும் உலகக் கோப்பையுடன் நிறைவு பெற்றது.
கடந்த 2016 முதல் அண்டர்-19 அணியின் பயிற்சியாளராகவும் என்சிஏவில் இயக்குனராகவும் செயல்பட்டு வந்த அவர் ரவி சாஸ்திரி தனது பதவியிலிருந்து விலகியதும் இந்திய சீனியர் அணியின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றார். ஆனால் அந்த பொறுப்பில் சோதனை என்ற பெயரில் அடிக்கடி மாற்றங்கள் செய்ததை வழக்கமாக வைத்திருந்த நிலையில் 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை ஆகிய 4 முக்கியமான தொடர்களில் இந்தியா தோல்வியை சந்தித்தது.
இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் 2023 உலகக் கோப்பையுடன் பதவி காலம் நிறைவுக்கு வருவதால் மேற்கொண்டு ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு வேண்டாம் என்ற கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த சூழ்நிலையில் 2022 ஐபிஎல் கோப்பையை வென்ற ஹாஷிஸ் நெஹ்ரா மற்றும் என்சிஏ இயக்குனராக இருக்கும் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோரில் ஒருவரை அடுத்த பயிற்சியாளராக நியமிப்பதற்கு பிசிசிஐ ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியானது.