
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நடைபெற்று முடிம்ந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் நிறைவடைந்து. இதனையடுத்து புதிய பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வெளியிட்ட நிலையில், இப்பதவிக்கு சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதிலிருந்து ஒரு சிலரை மட்டுமே பிசிசிஐ இறுதிசெய்ததாக தெரிவிக்கப்பட்டது. மேற்கொண்டு இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீரை பிசிசிஐ தேர்ந்தெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.
மேலும் இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் இன்னும் நியமிக்கப்படாத நிலையில், ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் தற்காலிக பயிற்சியாளராக தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. அதேசமயம் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஏற்கனவே கௌதம் கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் இருவரையும் பிசிசிஐ நேர்காணல் செய்தது. அவர்கள் இருவரில் கௌதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வலம் வந்தன.
இருப்பினும், தலைமைப் பயிற்சியாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவின் மூலம் உறுதிசெய்துள்ளார். இதனையடுத்து வரவுள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடர் முதல் கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படவுள்ளார். இருப்பினும் அணியின் மற்ற பயிற்சியாளர்கள் குறித்து எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகாததும் குறிப்பிடத்தக்கது.