
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து சுமார் ஐந்து மாதத்திற்கு பிறகு ஜடேஜா இந்திய அணிக்கு திரும்பி உள்ளார். எனினும் ஜடேஜா நினைத்தது போல் அவ்வளவு எளிதாக தற்போது அணிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்கு காரணம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின், அக்சர் பட்டேல் , குல்தீபி யாதவ் ஜோடி சிறப்பாக பந்து வீசி அசத்தியது. குறிப்பாக முதல் டெஸ்டில் குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றார். டெஸ்ட், டி20, ஒருநாள் என தமக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் அக்சர் பட்டேல் சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் ஜடேஜா ஐந்து மாதத்திற்கு பிறகு அணிக்கு திரும்புவது மூலம் அவருடைய ஃபார்ம் எவ்வாறு இருக்கும் என்று யாருக்குமே தெரியாது.
இதனால் பிசிசிஐ ஜடேஜாவை வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதன் காரணமாக தற்போது ஜடேஜாவுக்கு தேர்வு குழு உறுப்பினர்கள் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளனர். அதாவது முழு உடல் தகுதியை எட்டிய பிறகு ரஞ்சி கிரிக்கெட்டில் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. இதில் ஜடேஜா எவ்வாறு செயல்படுகிறார். அவருடைய பழைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சு எடுபடுகிறதா என்பதை பொறுத்தே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜடேஜா இடம் பெறுவார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.