
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு, இந்திய அணியின் அப்போதைய கேப்டனாக இருந்த விராட் கோலி அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுகிறேன் என்று அதிர்ச்சிகொடுத்தார். அதன் பிறகு அணியின் மூத்த வீரராகவும் ஐபிஎல் போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் நன்றாக செயல்பட்டவராகவும் இருந்த ரோகித் சர்மா மூன்றுவித போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இவர் தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் தோல்வியை தழுவியது, பின்னர் சர்வதேச டி20 உலககோப்பையில் அரையிறுதி வரை சென்று இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து வெளியேறியது. தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் ஆஸ்திரேலியா அணியிடம் படுதோல்வியை சந்தித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பெறமுடியாமல் வெளியேறியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பில் செயல்பட்ட விதம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக டாஸ் வென்று முதலில் பேட்டிங் எடுக்காமல் பந்துவீச்சு எடுத்தது. அதன் பிறகு நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர் மற்றும் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் பிளேயிங் லெவனில் எடுக்கப்படாதது, அணியின் தொடக்க வீரராகவும் கேப்டன் பொறுப்பிலும் இருக்கும் ரோஹித் சர்மா பேட்டிங்கில் படுமோசமாக செயல்பட்டது என அனைத்திற்கும் விமர்சனங்கள் அதிக அளவில் வருகின்றன.