பகலிரவு டெஸ்ட் போட்டிகளை புறக்கணிக்கும் பிசிசிஐ; ஜெய் ஷா அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கு பகலிரவு டெஸ்ட் போட்டிகள் திட்டமிடப்படவில்லை என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் கிரிக்கெட்டை வளர்ச்சியடைய செய்வதற்காக ஐசிசி தரப்பில் பல்வேறு வகையான போட்டிகள் பரிசோதனை முயற்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டை இளம் தலைமுறையினர் மத்தியில் கொண்டு செல்வதற்காகவும், கொஞ்சம் பொழுதுபோக்கை அதிகரிக்கவும் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படும் என்று அறிமுகம் செய்யப்பட்டது.
அந்த வகையில் இந்திய ஆடவர் அணி இதுவரை 4 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இந்த வகையான பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் இளஞ்சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்படும். இரவு நேரங்களில் இளஞ்சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்துவதே சரியான இருக்கும் என்பதால், ஐசிசி தரப்பில் பிங்க் பால் டெஸ்ட் என்று சொல்லப்பட்டு வருகிறது. அந்த பிங்க் பால் டெஸ்டில் தான் இந்திய அணி 36 ரன்களுக்கு சுருண்ட கதை அமைந்தது.
Trending
இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் இந்திய அணி உள்ளது. இந்த நிலையில் அடுத்த 2 ஆண்டுகளுக்கான டெஸ்ட் கிரிக்கெட் சீசனில் இந்திய அணிக்கு ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டிகளை கூட நடத்த பிசிசிஐ முன்வரவில்லை. இதுகுறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, “4 அல்லது 5 நாட்கள் நடக்க கூடிய டெஸ்ட் போட்டிகள், பிங்க் பால் டெஸ்ட் போட்டியாக நடைபெற்றால் வெறும் 3 நாட்களுக்குள் முடிவு எட்டப்பட்டுவிடுகிறது.
அதேபோல் பிங்க் பால் டெஸ்ட் போட்டிக்கான ரசிகர்களின் ஆர்வத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களும் 4 அல்லது 5 நாட்கள் வரை நடக்க கூடிய டெஸ்ட் போட்டிகளை தான் பார்க்க ஆவலாக உள்ளனர். கடந்த முறை ஆஸ்திரேலியா அணியுடன் பகலிரவு டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது. இதன்பின் இங்கிலாந்து அணியுடன் பேசி வருகிறோம். ஆனால் உடனடியாக அல்லாமல் படிப்படியாக செயல்படுத்துவோம்” என்று கூறியுள்ளார்.
தொடக்கம் முதலே பகலிரவு டெஸ்ட் போட்டிகளுக்கு பார்வையாளர்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த மாற்றத்தை கொண்டு வர தேவையில்லை என்பதே ரசிகர்களின் பார்வையாக உள்ளது. இதனால் பிசிசிஐ பகலிரவு டெஸ்ட் போட்டிகள் புறக்கணித்துள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now