ராகுல் டிராவிட்டின் பதவிக்காலத்தை நீட்டிக்க பிசிசிஐ முடிவு - தகவல்!
இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவருடைய பயிற்சியாளர் பொறுப்பை நீட்டிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது. அதன்பின் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பு ராகுல் டிராவிட்டுக்கு வழங்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற ராகுல் டிராவிட் உடன் 2 ஆண்டுகளுக்கு பிசிசிஐ ஒப்பந்தம் செய்தது.
இந்த ஒப்பந்தம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிவுக்கு வந்தது. ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் டி20 உலகக்கோப்பையில் அரையிறுதி தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வி, உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி என்று 3 ஐசிசி தொடர்களிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதனால் ராகுல் டிராவிட்டுக்கு பதவி நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
Trending
இதுகுறித்து உலகக்கோப்பை தொடருக்கு பின் ராகுல் டிராவிட் பேசுகையில், எங்களின் கவனம் முழுக்க உலகக்கோப்பை தொடர் மீதே இருந்தது. அதனால் எதிர்காலத்தை பற்றி சிந்திக்கவில்லை என்று பதில் அளித்திருந்தார். இந்த நிலையில் ராகுல் டிராவிட் விவகாரத்தில் பிசிசிஐ ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ராகுல் டிராவிட் இந்திய அணிக்குள் கொண்டு வந்த கலாச்சாரத்தை தொடர வேண்டும் என்று பிசிசிஐ நினைக்கிறது.
இதனால் புதிய பயிற்சியாளரை கொண்டு வந்தால், அது அணியின் சூழலுக்கு சரியாக இருக்காது. இதனால் ராகுல் டிராவிட்டுக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை நீட்டிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இதுகுறித்து ராகுல் டிராவிட் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. விரைவில் தனது முடிவை பிசிசிஐ-யிடம் ராகுல் டிராவிட் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் என்சிஏ தலைவராக தொடர்வதற்கு விவிஎஸ் லக்ஷ்மண் விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பொறுப்பை தொடர விரும்பினால், அவர் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்து தனது பணியை மீண்டும் தொடங்குவார் என்று பார்க்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்தியா ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now