மகளிர் ஐபிஎல் தொடர் குறித்து அப்டேட் வழங்கிய ஜெய் ஷா!
மகளிர் ஐபிஎல் போட்டி விரைவில் தொடங்கும், அதன் மதிப்பு அனைவரையும் திகைப்பூட்டும் விதத்தில் இருக்கும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியின்போது மகளிர் டி20 சேலஞ்ச் ஆட்டங்கள் நடைபெறுவது வழக்கம். எனினும் இதர நாடுகளைப் போலவே இந்தியாவிலும் டி20 லீக் போட்டியை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மகளிர் ஐபிஎல் போட்டியை அடுத்த வருடம் தொடங்குவது சரியாக இருக்கும். அது நிச்சயம் ஐபிஎல் போட்டியைப் போல பெரிய வெற்றியை அடையும் என்று கடந்த பிப்ரவரி மாதம் பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தார்.
இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மகளிர் ஐபிஎல் போட்டி பற்றி பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, “இந்தத் திட்டம் என் மனத்துக்கு மிகவும் நெருக்கமானது. முதல் வருடம் ஐந்து அல்லது ஆறு அணிகளுடன் ஆரம்பிக்கவுள்ளோம். நிறுவனங்களிடமிருந்து இதுகுறித்த உரையாடல்கள் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஐபிஎல் அணிகளின் பல உரிமையாளர்கள் மகளிர் ஐபிஎல் போட்டி பற்றி விசாரித்துள்ளார்கள். தங்களுக்கென்று ஓர் அணியை வைத்துக்கொள்ளவும் ஆர்வமாக உள்ளார்கள். அதேபோல வெளிநாட்டிலிருந்தும் பலர் விசாரித்துள்ளார்கள்.
இதர கிரிக்கெட் வாரியங்களுடன் பேசி வருகிறோம். இதனால் மகளிர் ஐபிஎல் போட்டியில் எல்லா முக்கிய வீராங்கனைகளும் பங்கேற்க முடியும். மகளிர் ஐபிஎல் போட்டியில் அணிகளின் மதிப்பு, ஒளிபரப்பு உரிமை போன்றவை அனைவரையும் திகைப்பூட்டும் விதத்தில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now