
ஜிம்பாப்வே அணி சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இந்த இரு தொடர்களையும் 2-1 என்ற கணக்கில் இழந்த ஜிம்பாப்வே அணி அடுத்ததாக ஆஃப்கானிஸ்தான் அணியுன் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது டிசம்பர் 9ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது டிசம்பர் 15ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதனையடுது இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது டிசம்பர் 26ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதிலும் குறிப்பாக இவ்விரு அணிகளுக்கும் இடையே முதல் முறையாக பாக்ஸிங் டே மற்றும் புத்தாண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இதில் டி20 தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியில் அறிமுக வீரர் ஸுபைத் அக்பாரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து தர்விஷ் ரசூலியும் மீண்டும் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்த முஜீப் உர் ரஹ்மனுக்கும் இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.