அபராதம் விதித்த ஐசிசி-யை விமர்சித்த பென் ஸ்டோக்ஸ்!
பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு ஐசிசி அபராதம் விதித்த நிலையில், அதனை இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விமர்சித்துள்ளார்
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான் முதலாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி வெல்லிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியை இழந்துள்ள நிலையில், அதற்கான பதிலடியை இப்போட்டியில் கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது. அதேசமயம் இங்கிலாந்து அணி இப்போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும்.
Trending
இதனால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் போது இரு அணிகளும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து அந்த குற்றச்சாட்டு நிரூபணமான நிலையில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு ஐசிசி தரப்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக இரு அணிகளுக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து தலா 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் இரு அணிகளுக்கும் தலா மூன்று புள்ளிகள் குறைக்கப்படுவதாகவும் ஐசிசி தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பின்னடைவை சந்தித்துள்ளன. அதிலும் குறிப்பாக நியூசிலாந்து அணி இந்த புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்தில் நீடித்து வந்த நிலையில், ஐசிசி அபராதம் காரணமாக தற்போது 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில், ஐசிசியின் இந்த முடிவை இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிரம் ஸ்டோரியில், நல்லது செய்துள்ளீர்கள் ஐசிசி. இன்னும் 10 மணிநேர ஆட்டம் மீதமுள்ள நிலையில் ஆட்டம் முடிந்தாலும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்று பதிவுசெய்துள்ளார். இந்நிலையில் பென் ஸ்டோக்ஸின் இந்த கருத்தானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now