ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தொடரில் பங்கேற்கும் அணிகள் வீரா்களை தக்க வைத்துக் கொள்ள அக்டோபர் 31ஆம் தேதியே கடைசி நாள் என்றும் பிசிசிஐ கெடு விதித்திருந்தது. அதன்படி அனைத்து அணிகளும் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டனர். முன்னதாக ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்கும் அணிகளுக்கான கட்டுபாடுகள், விதிமுறைகள் மற்றும் ஏலத்தொகை உள்ளிட்ட அறிவிப்புகளை பிசிசிஐ வெளியிட்டிருந்தது.
அதில் மிக முக்கியமாக எதிர்வரும் ஐபிஎல் வீரர்களுக்கான மெகா ஏலத்தில் வெளிநாட்டு வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்யவில்லையெனில் அடுத்தாண்டு நடைபெறும் மினி ஏலத்திலும் அவர்களால் பங்கேற்க முடியாது என்றும், ஏலத்தில் தேர்வான வெளிநாட்டு வீரர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லையெனில் அடுத்த 2 ஐபிஎல் தொடர் மற்றும் ஏலத்தில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்று அதிரடி முடிவினையும் ஐபிஎல் நிர்வாகம் எடுத்துள்ளது.