
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 7 வெற்றிகளை பெற்றுள்ளது. அதன் காரணமாக புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள இந்தியா அரையிறுதிச் சுற்றுக்கு முதல் அணியாகவும் தகுதி பெற்று சொந்த மண்ணில் தங்களை கில்லி என்பதை மீண்டும் நிரூபித்து வருகிறது.
இத்தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு நிகராக பவுலர்களும் தங்களுடைய அபார திறமையால் எதிரணிகளை தெறிக்க விட்டு வருவதே இந்தியாவின் வெற்றிகளுக்கு காரணம் என்று சொல்லலாம். குறிப்பாக முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த முகமது ஷமி காயத்தால் வெளியேறிய பாண்டியவுக்கு பதில் வாய்ப்பு பெற்று 5 விக்கெட்டுகளை சாய்த்து ஐசிசி தொடரில் நியூசிலாந்தை 20 வருடங்கள் கழித்து இந்தியா தோற்கடிக்க முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
அதே வேகத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெறும் 230 ரன்களை கட்டுப்படுத்தும் போது பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட 4 வீரர்களின் விக்கெட்டை சாய்த்த அவர் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். அதைத்தொடர்ந்து இலங்கைக்கு எதிரான போட்டியிலும் 5 விக்கெட்டுகள் சாய்த்த அவர் 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.