பும்ராவை ஸ்டோக்ஸுடன் ஒப்பிட்டு இந்திய அணியை விமர்சித்த இர்ஃபான் பதான்!
இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவின் 'பணிச்சுமை மேலாண்மை' குறித்து முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

Irfan Pathan Dig At Team Management For Overcaring Bumrah: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமையை இந்திய அணி நிர்வாகம் அதிகமாக கவனித்துக் கொள்வதாக இர்ஃபான் பதான் விமர்சித்துள்ளார்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொனட் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது வரையிலும் மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இதில் இங்கிலாந்து அணி இரண்டிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக லார்ட்ஸில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இறுதிவரை போராடி தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்த பிறகு, அணி நிர்வாகத்தின் உத்தி குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக ஜஸ்பிரித் பும்ராவின் 'பணிச்சுமை மேலாண்மை' குறித்து முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதிலும் குறிப்பாக அவர் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸையும் ஜஸ்பிரித் பும்ராவையும் ஒப்பிட்டு தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "இந்திய அணியின் இந்த தோல்வி ஏமாற்றமளிக்கிறது. பென் ஸ்டோக்ஸ் ஐந்தாவது நாள் காலையில் 9 ஓவர்கள் சிறப்பாக பந்து வீசினார், பேட்டிங் செய்தார், ரிஷப் பந்தையும் ரன் அவுட் செய்தார். ஆனால் அவர் பந்து வீசும்போது அவரது பணிச்சுமை பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால் இந்திய அணியில், பும்ரா 5 ஓவர்கள் மட்டுமே பந்து வீசிவிட்டு, பிறகு ஜோ ரூட்டின் விக்கெட்டிற்காக காத்திருக்கிறார். நீங்கள் ஆட்டத்தின் கட்டுப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டம் அது.
எட்ஜ்பாஸ்டனில் நடந்த 2ஆவது டெஸ்டில் அவர் ஓய்வில் இருந்தபோது அவரது பணிச்சுமை நிர்வகிக்கப்பட்டது. ஆனால் நீங்கள் போட்டியில் விளையாடும்போது, பணிச்சுமை என்ற கருத்து இருக்கக்கூடாது. போட்டியை வெல்வது மற்றும் உங்கள் அனைத்தையும் கொடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இது சிறப்பாக இருந்திருக்கலாம். ஆனால் இந்த போட்டியில் நாம் அவரை அதிகம பயன்படுத்தவில்லை என்று தோன்றுகிறது.
அதேசமயம் இங்கிலாந்தை பொறுத்தவரையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் விளையாடும் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஐந்தாவது நாளில் ஆறு ஓவர்கள் வீசுகிறார். இதற்கு முன்பு, அவர் முதல் தர போட்டியில் 18 ஓவர்கள் வீசினார். அதன் பிறகும், அவர் விடாப்பிடியாக இருந்தார். மறுபக்கம் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்தையும் செய்கிறார். ஆனால் நாங்கள் அதில் பின் தங்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
இர்ஃபான் பதான் கூறுவது போல் இத்தொடருக்கு முன்னரே இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா பணிச்சுமை என்பதை காரணம் காட்டி மூன்று டெஸ்டில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்சமயம் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளதால், எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் அவர் விளையாடுவாரா அல்லது ஏதேனும் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Win Big, Make Your Cricket Tales Now