
இந்திய மகளிர் அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது டிசம்பர் 15ஆம் தேதியும், ஒருநாள் தொடர் டிசம்பர் 22ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதில் டி20 தொடரானது நவி மும்பையிலும், ஒருநாள் தொடர் வதோதராவிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில் இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், அணியின் துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கின்றனர். அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியில் ஷஃபாலி வர்மாவுக்கு இடம் கிடைக்கவில்லை. முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஷஃபாலி வர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்திய அணியின் அதிரடி தொடக்க வீராங்கனையன ஷஃபாலி வர்மா தொடர்ந்து அடுத்தடுத்த தொடர்களில் புறக்கணிக்கப்படுவதற்கான காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் அழ்ந்துள்ளனர். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஷஃபாலி வர்மா அணியில் இடம்பெறாத காரணத்தை சரியான நபரிடம் கேளுங்கள் என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.