
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரானது கடந்த நவம்பர் 22ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியதுடன், முதல் இன்னிங்ஸில் வெறும் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்சியளித்தது.
பின்னர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, ஆஸ்திரேலியாவை அதன் முதல் இன்னிங்ஸில் 104 ரன்களில் சுருட்ட, அடுத்த இன்னிங்சில் அபாரமாக செயல்பட்ட இந்திய அணி 487 ரன்களை குவித்து அசத்தியது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 161 ரன்களையும், விராட் கோலி 100 ரன்களையும் சேர்த்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் கடினமாக போராடிய டிராவிஸ் ஹெட் 89 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 47 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொதப்பினர். இதனால் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 238 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேஒலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.