
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெற்று வரும் நிலையில், இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருவது இந்திய அணி ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்தவகையில் இந்திய அணியில் அதிரடி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுல் 37 ரன்னிலும், ஷுப்மன் கில் 31 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அவர்கள் தவிரர்த்து அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பந்த் உள்ளிட்டோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளி இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் இந்திய அணி 109 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதனையடுத்து ஜோடி சேர்ந்துள்ள நிதீஷ் ரெட்டி மற்றும் ரவிச்சந்திரன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த போட்டியில் சதமடித்து கம்பேக் கொடுத்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இப்போட்டியில் 7 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.