
பிருத்வி ஷா தனது நண்பர்களுடன் மும்பையில் உள்ள சொகுசு விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, போஜ்பூரி நடிகை சப்னா கில்லும் அவரது நண்பர்களும் பிருத்வி ஷாவிடம் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அவருடம் 2 புகைப்படங்களுக்கு மேல் எடுக்க கூடாது என்று சொல்லியும், மறுபடியும், மறுபடியும் அவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டே இருந்துள்ளனர்.
ஒருகட்டத்தில் அவர்களுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின் கைகலப்பாகியுள்ளது. இதன் காரணமாக பிருத்வி ஷாவின் நண்பரது கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிருத்வி ஷா அளித்த புகாரின் பேரில் ஓஷிவாரா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சப்னா கில் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.
கடந்த 17 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட அவர்களுக்கு ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து அவர்கள் வெளியில் வந்தனர். இந்த நிலையில், வெளியில் வந்த சப்னா கில், பிருத்வி ஷா மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.