
இலங்கை அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய நிலையில், நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்துள்ளன.
இதையடுத்து இத்தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது இலங்கை வீரர் தில்ஷன் மதுஷங்கா காயமடைந்ததாக தகவல் வெளியானது.
அதன்படி இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பந்துவீசிய தில்ஷன் மதுஷங்கா தனது இடது தொடைபகுதியில் காயமடைந்தார். இதையடுத்து அவர் களத்திலிருந்து வெளியேறி மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளபட்ட ஸ்கேன் பரிசோதனையின் முடிவில் அவரது காயம் தீவிரமடைந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து இத்தொடரில் மேற்கொண்டு அவரால் விளையாட முடியாது என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.