ஜஸ்ப்ரித் பும்ரா அணியின் இருப்பது எனது பாக்கியம் - ஹர்திக் பாண்டியா!
பும்ரா போன்ற ஒரு பந்துவீச்சாளர் தங்கள் அணியில் இருக்க வேண்டும் என அனைத்து கேப்டன்களும் விரும்புவார்கள் என மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 61 ரன்களையும், ராஜத் பட்டிதார் 50 ரன்களையும் சேர்க்க, இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 53 ரன்களைச் சேர்த்தார். மும்பை அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷான் - ரோஹித் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் ஒடுத்து அசத்தினர். இதில் இஷான் கிஷான் 23 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 7 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 69 ரன்களில் இஷான் கிஷான் விக்கெட்டை இழக்க, மறுப்பக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மாவும் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் தனது கம்பேக் போட்டியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 17 பந்துகளில் அரைசதம் கடந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Trending
மறுப்பக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் அதிரடியாக விளையாடி 21 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 15.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது. இந்நிலையில், பும்ரா போன்ற ஒரு பந்துவீச்சாளர் தங்கள் அணியில் இருக்க வேண்டும் என அனைத்து கேப்டன்களும் விரும்புவார்கள் என மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “வெற்றி பெறுவது எப்போதும் நல்லது. இப்போட்டியில் நாங்கள் வெற்றிபெற்ற விதம் மகிழ்ச்சியளிக்கிறது. தேவைப்பட்டால் கூடுதல் பந்துவீச்சாளரைப் பயன்படுத்தும் வாய்ப்பை இம்பாக்ட் பிளேயர் விதி வழங்கியுள்ளது. அது எப்போதும் எனக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்துகிறது. அதேசமயம், யாருக்காவது மோசமான நாள் இருந்தால், அந்த ஓவர்களை மாற்ற இந்த விதியானது நமக்கு உதவுகிறது. அதேபோல் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் இப்போட்டியில் பேட்டிங் செய்த விதம், அணிக்கு அடித்தளத்தை அமைத்து கொடுத்ததுடன் எங்களால் இலக்கை சீக்கிரம் எட்டுவதற்கும் உதவியாக இருந்தது.
நாங்கள் இப்போட்டியின் வெற்றி குறித்து அதிகம் பேசவில்லை. அதுதான் இந்த அணியின் அழகும் கூட. ஏனெனில் வீரர்களின் நிலைமை என்னவென்று தெரியும். இலக்கு குறைவதைக் கண்டவுடனே, நெட் ரன்ரேட்டிற்கு முன்னதாகவே ஆட்டத்தை முடித்துவிடலாம் என்று நினைத்தோம். எங்கள் அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா இருப்பது மிகப்பெரும் பாக்கியமாக கருதுகிறேன். ஏனெனில் அவர் தொடர்ந்து தனது அபார திறமையை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்கிறார். நான் எப்போது அவரை பந்துவீச அழைத்தாலும், அவர் தனது வேலையை சரியாக செய்து முடிக்கிறார்.
அவரைப் போன்ற ஒரு வீரர் தங்கள் அணியில் இருக்க வேண்டும் என அனைத்து கேப்டன்களும் விரும்புவார்கள். மேலும் சூர்யகுமார் யாதவ் இப்போட்டியில் விளையாடி விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் அவர் தனது கம்பேக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது அணிக்கு கூடுதல் பலத்தைக் கொடுத்துள்ளது. மேலும் போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணிக்கு என்ன தேவையோ அதனை நான் செய்துவருகிறேன். கடந்த போட்டியில் நான் மொதுவாக தொடங்கினாலும், இப்போட்டியில் சூழ்நிலையைப் பொறுத்து நான் முதல் பந்தில் இருந்தே விளையாடினேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now