
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. அதன்படி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறும் இத்தொடரானது நவம்பர் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இத்தொடருக்கான இடம், தேதி ஆகியவற்றை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இது நடைபெறவுள்ளது. இதன்மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர். அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது. மேலும் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பலிரவு ஆட்டமாக அடிலெய்டிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலும் நடைபெறவுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது மெல்போர்னிலும், அதைத்தொடர்ந்து இத்தொடரின் கடைசி போட்டியானது புத்தாண்டு டெஸ்ட் போட்டியாக சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.