
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமேரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில் தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டி20 தொடரானது மே 23ஆம் தேதி தொடங்கி மே 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி இத்தொடரின் அனைத்து போட்டிகளும் ஜமைக்காவில் உள்ள சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் தென் ஆப்பிரிக்க அணியானது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் அந்த அணிக்கு ரஸ்ஸி வேண்டர் டுசென் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகாராஜ், நந்த்ரே பர்கர் ஆகியோருக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்ட்டுள்ளது. இருப்பினும் குயின்டன் டி காக், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, லுங்கி இங்கிடி, ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், மேத்யூ பிரீட்ஸ்கி , தப்ரைஸ் ஷம்ஸி போன்ற நட்சத்திர வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.