
இங்கிலாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது.
இதன்மூலம் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 565 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஒல்லி போப் 172 ரன்களையும், பென் டக்கெட் 140 ரன்களையும், ஸாக் கிரௌலி 124 ரன்களையும் குவித்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளெசிங் முஸரபானி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியின் பிரையன் பென்னட் சதமடித்து அசத்தியதுடன் 139 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
மேற்கொண்டு கேப்டன் கிரெய்க் எர்வின் 42 ரன்கள் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 265 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 300 ரன்கள் பின் தங்கியதுடன் ஃபாலோ ஆனும் ஆனது. இதனையடுத்து அந்த அணி இரண்டவாது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.