
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக மிகச் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். தனது ஆரம்பகாலம் முதலே 3 வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியில் விளையாடி வருவதே விராட் கோலியின் ஸ்பெஷலாகும்.
மேலும் சச்சின் ஓய்வு பெற்ற பின் அவரைப் போலவே ரன் மெஷினாக உலகின் அனைத்து டாப் பவுலர்களையும் மிகச் சிறப்பாக எதிர்கொண்டு வரும் விராட் கோலி 26,000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வருகிறார். அந்த வரிசையில் 2023 உலகக் கோப்பையில் 765 ரன்கள் குவித்த அவர் ஒரு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் ஆல் டைம் சாதனையை உடைத்தார்
அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை முந்தி 50 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையும் படைத்த அவர் தற்சமயத்தில் உலக கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வருகிறார். அது போக தம்முடைய உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளை மாற்றி ஃபிட்டாக இருக்கும் அவர் உலக கிரிக்கெட்டில் ஃபிட்னஸ் எனும் வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக செயல்பட்டு வருகிறார்.