
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் அடுத்தடுத்த வெற்றிகளைக் குவித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், தொடரை நடத்தும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன. அதேசமயம் குரூப் பி பிரிவைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் தலா ஒரு வெற்றியுடன் உள்ள நிலையில், ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகள் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளன.
இதனால் குரூப் பி பிரிவில் எந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் இத்தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய நிலையில், அடுத்த போட்டியில் ஆஃப்கானிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக அந்த அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.