
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. டி20 தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இலங்கை அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு நாள் போட்டியில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால், டி20 தொடரிலும், ஒரு நாள் தொடரிலும் ரிஷப் பண்ட் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இடம் பெறவில்லை. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மும்பை மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதைத் தொடர்ந்து புனே மைதானத்தில் 5ஆம் தேதி 2ஆவது டி20 போட்டி நடக்கிறது. 7 ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நடக்கிறது.
இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி வரும் 10 ஆம் தேதி கவுகாத்தியில் நடக்கிறது. 2ஆவது ஒரு நாள் போட்டி 12 ஆம் தேதி கொல்கத்தா மைதானத்தில் நடக்கிறது. 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் 15 ஆம் தேதி திருவனந்தபுரம் மைதானத்தில் நடக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் காயத்திலிருந்து மீண்டு வந்த பும்ரா, ஆஸ்திரேலிய தொடரில் ஒரு போட்டியில் விளையாடிய போது மீண்டும் காயம் ஏற்பட அவர் ஓய்வில் இருந்தார்.