
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கேமரூன் க்ரீன். கடந்தாண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் முதுகு பகுதியில் காயத்தை சந்தித்தார். மேலும் அவரது காயம் தீவிரமடைந்ததை அடுத்து அவர் அத்தொடரில் இருந்தும் விலகினார்.
மேற்கொண்டு காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த கேமரூன் க்ரீன், இந்திய அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இருந்தும் விலகியதுடன், பிக் பேஷ், சாம்பியன்ஸ் கோப்பை, ஐபிஎல் என அடுத்தடுத்த முக்கிய தொடர்களில் இருந்தும் விலகினார். இந்நிலையில் அவர் தற்சமயம் காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதுடன், இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறார்.
அந்தவகையில், கவுண்டி கிரிக்கெட் தொடரில் குளோஸ்டர்ஷையர் அணிக்காக களமிறங்கிய கேமரூன் க்ரீன் தனது கம்பேக் போட்டியிலேயே சதமடித்து அசத்தியுள்ளார். அதன்படி கென்ட் அணிக்கு எதிரான போட்டியில் கேமரூன் க்ரீன் 7 பவுண்ட்ரிகளுடன் சதமடித்து அசத்திய கையோடு ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். இதன்மூலம் குளோஸ்டர்ஷையர் அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 365 ரன்களைச் சேர்த்துள்ளது.