
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக் கோப்பை தொடரானது துவங்க உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஹாங்காங் என ஆறு நாடுகள் கலந்து கொள்ளும் இந்த தொடரானது ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை துபாய் மற்றும் ஷார்ஜியா ஆகிய மைதானங்களில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பாகிஸ்தான் போட்டிக்கான தயாரிப்பு பணி குறித்தும், விராட் கோலி குறித்த கேள்விக்கு கேஎல் ராகுல் பதிலளித்தார். இந்த கேள்விகளுக்கு எல்லாம் அமைதியாக பதில் அளித்த ராகுல், கோலியை பற்றி பேசும் போது கொஞ்சம் பொங்கி விட்டார்.
இதுகுறித்து பேசிய கேஎல் ராகுல், “பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம். இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் மிக சவாலான ஒன்றாக இருக்கும். கடந்த முறை டி20 உலகக் கோப்பை தொடரில் தோல்வியை தழுவினோம். அதன் பிறகு இப்போது தான் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இரு அணிகளும் இது போன்ற பெரிய தொடரில் தான் சந்திக்கிறோம். இதற்கு முன்பு நாங்கள் எவ்வளவு முறை மோதினோம், எவ்வளவு முறை வென்றோம் என்பது எல்லாம் கணக்கில் வராது.