
இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் நேற்றைய தினம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அந்தவகையில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த கையோடு அஸ்வினின் இந்த அறிவிப்பும் வெளியானது.
இதனையடுத்து ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது. மெற்கொண்டு இந்திய அணி வீரர்கள் மைதானத்தில் இரு வரிசையாக நின்று அஸ்வினுக்கு கார்ட் ஆஃப் ஹானர் மரியாதயையும் செலுத்தினர். இந்நிலையில் போட்டி முடிந்ததும், ஆஸ்திரேலியாவின் அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளர் நாதன் லையன் மற்றும் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆகியோர் அஸ்வினுக்கு ஆஸ்திரேலிய அணி கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசாக வழங்கினர்.
இந்நிலையில் அஸ்வினின் ஓய்வு முடிவு குறித்து பேசிய லையன், "அஷ்வின் மீது மரியாதை மட்டுமே உள்ளது. பல ஆண்டுகளாக அஷ்வின் களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அவரது திறமை வியக்க வைக்கிறது. சில விஷயங்களில் எங்களுக்கு வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம், ஆனால் அதில் சரியோ தவறோ இல்லை. நான் அவருடன் உரையாடியுள்ளேன். எதிர்காலத்திலும் இன்னும் அதிகம் உரையாடுவோம் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.