
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக இத்தொடருக்கு முன் இவ்விரு அணிகளும் மோதிய முத்தரப்பு ஒருநாள் தொடரின் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்று பெற்று சிறப்பான ஃபார்மில் உள்ளது.
அதேசமயம் பாகிஸ்தான் அணி அத்தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பான வெற்றியைப் பதிவுசெய்த நிலையிலும், இறுதிப்போட்டியில் அந்த அணியால் வெற்றியைப் பதிவுசெய்ய முடியாமல் போனது. இதனால் அத்தோல்விகளுக்கு இப்போட்டியில் பாகிஸ்தான் அணி பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளனர். அதேசமயம் அந்த அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் தொடர்ந்து ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறி வருவது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.