
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதி சுற்றுடன் இத்தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் 280 ரன்களுக்கு மேல் அடித்திருந்தால் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஸ்மித், “இந்தப் போட்டியில் எங்கள் அணி பந்து வீச்சாளர்கள் உண்மையிலேயே சிறப்பாக செயல்பட்டார்கள் என்று நான் நினைக்கிறேன், அவர்கள் முழுவதும் கடினமாக உழைத்தார்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தை ஆழமாக எடுத்துச் சென்றார்கள்.
இந்த பிட்ச் பேட்டிங் செய்வதற்கு சற்று கடினமாக இருந்ததால் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ய கடினமாக இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இது இரட்டை வேக ஆடுகளமாக இருந்தது. நாம் இன்னும் சில ரன்கள் எடுத்திருக்கலாம். முக்கியமான நேரங்களில் சில விக்கெட்டுகளை இழந்தோம். நாங்கள் 280 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்திருந்தால், இப்போட்டியின் முடிவு வித்தியாசமாக இருந்திருக்கும்.