
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிகெட் தொடர் இன்று முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.
இதில் இன்று நடைபெறும் முதல் லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் போது அவர் காயமடைந்தார்.
அதன்பின் காயத்திற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர் நிச்சயம் இத்தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகி இருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருக்கான மாற்று வீரராக இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானாவுக்கு இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.