
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியானது நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 73 ரன்களையும், அலெக்ஸ் கேரி 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 61 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஷுப்மன் கில் 8 ரன்னிலும், ரோஹித் சர்மா 23 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்னிலும், அக்ஸர் படேல் 27 ரன்னிலும் விக்கெட்டை இழந்த நிலையில், சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 84 ரன்னில் ஆட்டமிழந்தார்.