
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.இதில் தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றியைப் பதிவுசெய்த நிலையில், நியூசிலாந்துடன் தோல்வியைத் தழுவிய கையோடு இத்தொடரை எதிர்கொள்கிறது. மறுபக்கம் ஆஃப்கானிஸ்தான் அணியானது சமீப காலங்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இதனால் இப்போட்டியில் இரு அணிகளும் வெற்றிகாக கடுமையாக போராடும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி, தங்கள் முதல் ஐசிசி பட்டத்தை நோக்கி வெற்றியுடன் தொடங்குவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.