
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2ஆவது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதுடன், பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்தது.
இரண்டு டெஸ்டிலும் இந்திய சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி 3ஆவது நாளிலேயே சுருண்டது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் வருகிற 1ஆம் தேதி தொடங்குகிறது. தனது தாயார் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் கேப்டன் கம்மின்ஸ் 3ஆவது டெஸ்டில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக ஸ்டீவன் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துகிறார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியினர் மோசமான தோல்வியை சந்தித்ததால் அந்த அணி மீது விமர்சனங்கள் எழுந்து இருக்கின்றன. அந்த அணியினர் சூழ்நிலையை சரியாக புரிந்து துணிச்சலுடன் ஆடவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பலும் ஆஸ்திரேலிய அணியின் செயல்பாட்டை குறை சொல்லி இருக்கிறார்.