ஒரே அணிக்காக விளையாடும் புஜாரா & ரிஸ்வான்!
இந்தியாவின் புஜாரா மற்றும் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானும் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் தொடரில் சசெக்ஸ் அணிக்காக அறிமுக வீரர்களாக களம் இறங்கியுள்ளனர். இதனை இருநாட்டு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இங்கிலாந்து நாட்டில் கவுன்டி கிரிக்கெட் மிகவும் பிரபலம். இதில் உள்நாட்டு வீரர்களுடன் வெளிநாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் விளையாடுவது வழக்கம். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான புஜாரா கடந்த 2014 முதலே கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். வெவ்வேறு அணிக்காக விளையாடி வந்த புஜாரா, இப்போது சசெக்ஸ் அணிக்காக இந்த சீசனில் விளையாடுகிறார்.
இதே அணிக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வானும் நடப்பு சீசனில் விளையாடுகிறார். முதல் முறையாக கவுன்டி கிரிக்கெட்டில் அவர் விளையாடுகிறார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் ஆடுகளத்தில் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்யும் போதெல்லாம் ஆட்டம் அனல் பறக்கும்.
இந்த முறை இருநாட்டு வீரர்களும் ஒரே அணிக்காக கவுன்டி கிரிக்கெட் களத்தில் விளையாடுவது ரசிகர்களின் கவனத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. அவர்கள் இருவரும் சசெக்ஸ் அணியின் ஜெர்ஸியில் இணைந்து ஒன்றாக நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டுள்ளது.
இப்போது சசெக்ஸ் அணி, கவுன்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் 2 தொடரில் டெர்பிஷையர் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. புஜாராவும், ரிஸ்வானும் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now