
கோலாகலமாக பிறந்துள்ள 2024 புத்தாண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியா சிறப்பாக விளையாடி புதிய வெற்றிகளை பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஏனெனில் 2023ஆம் ஆண்டு ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருதரப்பு தொடர்களில் எதிரணிகளை தெறிக்க விட்டு தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று அசத்தியது.
அதன் காரணமாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டின் ஐசிசி தரவரிசையிலும் ஒரே நேரத்தில் முதலிடம் பிடித்த அணியாக இந்தியா உலக சாதனை படைத்தது. ஆனால் இதை தவிர்த்து முக்கியமான 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுத்ப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொதப்பிய இந்தியா 2ஆவது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.
அதை விட சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்ற இந்தியா மீண்டும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சுமாராக விளையாடி கோப்பையை கோட்டை விட்டது. கடைசியாக 2013இல் எம்எஸ் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்த இந்தியா அதன் பின் கடந்த 10 வருடங்களாக ஏறத்தாழ அனைத்து ஐசிசி தொடர்களிலும் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டாலும் அரையிறுதி, இறுதிப்போட்டி போன்ற நாக் அவுட் போட்டிகளில் சொதப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது.