
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது பதிப்பானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் அரையிறுதி போட்டிக்கு இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் முன்னேறின. இதில் தென் ஆப்பிரிக்க அணியானது ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில், நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வநிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணியானது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், லீக் சுற்றுடனே வெளியேறியது. இதனால் முன்னாள் சாம்பியனான இலங்கை அணி மீண்டும் ஒருமுறை லீக் சுற்றுடனே வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனையடுத்து இலங்கை அணியின் தோல்விக்கு பொறுப்பேற்று அணியின் பேட்டிங் ஆலோசகராக செயல்பட்டுவந்த முன்னாள் வீரர் மஹேலா ஜெயவர்த்னே தனது பதிவியிலிருந்து விலகினார். இந்நிலையில், தற்போது அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த கிறிஸ் சில்வர்வுட்டும் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இதனையை இலங்கை கிரிக்கெட் வாரியமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.