
இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான லங்கா பிரீமியர் லீக்கின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் ஆட்டத்தில் கண்டி ஃபால்கன்ஸ் - கொழும்பு ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கண்டி அணியின் தொடக்க வீரர்கள் பதும் நிஷங்கா 2 ரன்னிலும், ஆண்ட்ரே ஃபிளட்சர் ரன் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கமிந்து மெண்டிஸும் 23 ரன்களோடு நடையைக் கட்டினார். இதன்பின் ஜோடி சேர்ந்த ஆஷென் பண்டாரா - வநிந்து ஹசரங்கா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் பண்டாரா 40 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட, மறுமுனையில் வநிந்து ஹசரங்கா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். தொடர்ந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹசரங்கா 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 77 ரன்களை விளாசினார்.