
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1 – 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக பங்கேற்கும் இந்த கடைசி தொடரில் இந்தியா வென்றாலும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் இறுதியாக விளையாடப் போகும் 11 பேர் யார் என்ற கேள்வி இப்போதும் நிலவுகிறது.
ஏனெனில் கடந்த வருடம் விராட் கோலி தலைமையில் லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியாவுக்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா – பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் ஏராளமான மாற்றங்களை செய்து வருகின்றனர்.
அணி தோற்றாலும் வென்றாலும் ஒவ்வொரு போட்டிக்கும் பின்பும் ஒவ்வொரு தொடருக்கும் பின்பும் மாற்றங்கள் நிகழ்வது இவர்களது தலைமையில் சாதாரணமாகி விட்டது. அதிலும் மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய சூரியகுமார், ரிஷப் பந்த் ஆகியோரை தொடக்க வீரர்களாக பயன்படுத்தியது, கிடைத்த வாய்ப்புகளில் அசத்திய சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்காதது, அற்புதமான ஃபார்மில் இருந்தும் தினேஷ் கார்த்திக்கை நம்பாமல் ரிஷப் பந்தையே முக்கிய போட்டிகளில் பயன்படுத்தியது என அவர்கள் செய்யும் மாற்றங்களுக்கு உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.