
இந்தாண்டு ஜூன் மாதம் ஐசிசியின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இத்தொடருக்கான போட்டி அட்டவணைகளும் வெளியிடப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்தவகையில் தொடரை நடத்தும் அமெரிக்கா அணியும் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்காக தயராகி வருகிறது. அந்தவகையில் அந்த அணி கனடா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான அமெரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நியூசிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய கோரி ஆண்டர்சன் தற்போது அமெரிக்க டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணிக்காக கடந்த 2012ஆம் அறிமுகமான கோரி ஆண்டர்சன் 2018ஆம் ஆண்டு நியூசிலாந்து கிரிக்கெட் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த இடைபட்ட காலத்தில் நியூசிலாந்து அணிக்காக 13 டெஸ்ட், 49 ஒருநாள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடி 2ஆயிரத்திற்கு மேற்பட்ட ரன்களையும், 90 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார். அதன்பின் அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வந்த கோரி ஆண்டர்சன் தற்போது அமெரிக்க அணிக்காக மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவுள்ளது.