
2022ஆம் ஆண்டுக்கான 15ஆவது சீசன் ஐபிஎல் போட்டியில், தற்போது ஏறக்குறைய முதல் சுற்று சூப்பர் லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. கொரோனா காரணமாக மும்பை, நவி மும்பை, புனே ஆகிய மைதானங்களில் மட்டும் ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. எனினும், டெல்லி அணியில், அடுத்தடுத்து கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது, ரசிகர்கள் மற்றும் வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த 15ஆம் தேதி, அந்த அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபார்ஹார்ட்டுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கரோனா பரிசோதனை எடுத்தபோது நெகட்டிவ் என வந்ததால், கடந்த 16ஆம் தேதி பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் அந்த அணி பங்கேற்றது.
இதையடுத்து இன்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கலந்துகொள்வதற்காக, கடந்த 18ஆம் தேதி புனே செல்ல இருந்த டெல்லி அணி வீரர்களுக்கு, ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொண்டபோது, ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான மிட்சல் மார்ஷ்-க்கு பாசிட்டிவ் என வந்தது. இதையடுத்து வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, ஐபிஎல் நிர்வாகம் வழிகாட்டுதல்களின்படி ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.