
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கயானா அணியில் கெவின் சிக்ளேர் 17 ரன்களிலும், ஷாய் ஹோப் 12 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் - ஷிம்ரான் ஹெட்மையர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இருவரும் இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்தியதுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 69 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரஹ்மனுல்லா குர்பாஸ் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அசாம் கான் 2 ரன்களுடனும், அதிரடியாக விளையாடிய கீமோ பால் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 38 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிம்ரான் ஹெட்மையர் 11 சிக்ஸர்களை விளாசி 91 ரன்களை எடுத்திருந்த நிலைல் ஆட்டமிழந்தார்.
இதன் காரணமாக கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்களைச் சேர்த்தது. பேட்ரியாட்ஸ் அணி தரப்பில் கைல் மேயர்ஸ், ஆன்ரிச் நோர்ட்ஜே, பெர்மால், மெஹ்சின், ஓடியன் ஸ்மித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பேட்ரியாட்ஸ் அணியில் எவின் லூயி 3 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கைல் மேயர்ஸும் 28 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த கேப்டன் ஆண்ட்ரே ஃபிளெட்சர் - ரூதர்ஃபோர்ட் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.