
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அன்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லூசியா கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஃபால்கன்ஸ் அணிக்கு ஜஸ்டின் க்ரீவ்ஸ் - ஃபகர் ஸமான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 35 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஃபகர் ஸமான் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கோஃபி ஜேம்ஸ் 5 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜஸ்டின் க்ரீவ்ஸும் 36 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஜுவெல் ஆண்ட்ரூ 15, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இமாத் வசிம் 29, சாம் பில்லிங்ஸ் 14 ரன்களைச் சேர்த்ததை தவித்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.
இதனால் ஃபால்கன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்தது. செயின்ட் லூசியா கிங்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தொடங்கியது.