இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இருக்கிறது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை முடித்துக் கொண்டு நட்சத்திர வீரர் விராட் கோலி தனி விமானத்தில் நாடு திரும்பிவிட்டார். இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸிற்கு மிக அருகில் இருக்கும் அமெரிக்காவிற்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சென்றுள்ளார். காரணம் கலிபோர்னியா மாகாணத்தில் தன்னுடைய “கிரிக் கிங்டம்” எனும் கிரிக்கெட் அகாடமியை தொடங்கி வைக்க சென்று இருக்கிறார்.
மேலும் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இரு நாடுகளிலும் சேர்த்து டி20 தொடர் நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் இதை முன்னிட்டு இந்த ஆண்டு கிரிக்கெட்டை தீவிரப்படுத்தும் விதமாக மேஜர் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் டி20 தொடர் மிக வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
ரோஹித் சர்மா தற்போது அமெரிக்காவில் கிரிக்கெட்டுக்கான தேவைகள் மிக அதிக அளவில் அதிகரித்துள்ள காரணத்தால் தனது கிரிக்கெட் அகாடமியை அங்கும் திறக்க முடிவு செய்து இன்று திறந்திருக்கிறார். இதில் பங்கேற்ற அவரிடம் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டதற்கு அவர் மிக வெளிப்படையான பதில்களை கூறி இருக்கிறார்.