
ஆசிய விளையாட்டு போட்டிகள் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ஆம் தேதிவரை சீனாவில் நடைபெறவுள்ளன. இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் இம்முறை கிரிக்கெட் தொடரும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவும் இந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் 2010, 2014ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடரில் கிரிக்கெட் தொடர் இடம்பெற்றது. ஆனால், இந்திய அணி அதில் களமிறங்கவில்லை.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய ஆடவர், மகளிர் ஆகிய இரண்டு அணிகளும் களமிறங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மகளிர் அணியில் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பெறுவது உறுதியாகியுள்ள நிலையில், இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் இடம்பெற வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்து, ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற இருப்பதால், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் 2ஆம் தர அணி வீரர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகின.
குறிப்பாக, ஐபிஎல் 16ஆவது சீசனில் சிறப்பாக செயல்பட்ட இளம் இந்திய வீரர்களான ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, திலக் வர்மா போன்றவர்கள் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டது. இந்த அணியை வழிநடத்த அனுபவம் வாய்ந்த வீரர் தேவை என்பதால், ஷிகர் தவனை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்யும் எனக் கருதப்பட்டது.