
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் மற்றும் அரையிறுதியில் தோல்விகளை சந்திக்காத ஒரே அணியாக தொடர்ச்சியான 10 வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்தது. மேலும் அனைத்து வீரர்களும் உச்சகட்ட ஃபார்மில் அதிரடியான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் 2011 போல இந்தியா கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பினர்.
இருப்பினும் அஹ்மதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங்கில் 240 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா வெற்றியை கோட்டை விட்டது ரசிகர்களுக்கு மறக்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் இத்தொடரில் பாகிஸ்தானை தொடர்ந்து 8ஆவது முறையாக தோற்கடித்தது, நியூசிலாந்தை அரையிறுதியில் முதல் முறையாக வீழ்த்தியது போன்ற மறக்க முடியாத வெற்றிகளையும் இந்தியா பதிவு செய்தது.
அதே போல இந்த உலகக் கோப்பையில் அசத்திய வீரர்களுக்கு மத்தியில் முகமது ஷமி வெளிப்படுத்திய செயல்பாடுகள் காலத்திற்கும் மறக்க முடியாததாக அமைந்தது. ஏனெனில் முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த அவர் ஹர்திக் பாண்டியா காயமடைந்ததால் கிடைத்த வாய்ப்பின் முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை எடுத்து நியூசிலாந்தை 30 வருடங்கள் கழித்து ஐசிசி தொடரில் தோற்கடிக்க உதவினார்.