
ஐபிஎல் 15ஆவது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது பாதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கிட்டத்தட்ட பாதி அணிகள் 7 போட்டிகளில் ஆடியுள்ளன. இதுவரை 32 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு டி.ஒய். பாட்டீடல மைதானத்தில் நடைபெறும் 33-வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் துவங்கியது முதல் தோனி தலைமையிலான சென்னை அணிக்கும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணிக்கும் தான் ரசிகர்கள் அதிகம். இதனால் இந்த இரு அணிகள் மோதும்போது, பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மும்பை அணி. இதேபோல், 4 முறை கோப்பை வென்றுள்ளது சென்னை அணி.
அதிக முறை கோப்பைகளை வென்ற இந்த இரு அணியும், இந்த ஆண்டு சீசனில் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. ஏனெனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நடப்பு தொடரை படுதோல்வியுடன் துவங்கிய சென்னை அணி, தொடர்ச்சியாக நான்கு தோல்விகளை சந்தித்தது.