
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் 6 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய செதிகுல்லா அடலும் 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டாமிழந்தார்.
அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ரஹ்மத் ஷாவும் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஜோஃப்ரா ஆர்ச்சரிடம் விக்கெட்டை இழந்தார். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 37 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த இப்ராஹிம் ஸத்ரான் - கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதன்மூலம் இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.